I'm always "Squabble with Rife"

Monday, May 5, 2014

ஓமம்

குராசாணி ஓமம் காட்டு வகையைச் சார்ந்தது. மருந்தாக மாத்திரம் பயன்படும். மற்ற இரண்டு வகைகளான அசமதா ஓமம் மற்றும் ஓமம் உணவுப் பொருளாகப் பயன்படும். மிக அதிக அளவில் கேல்ஷியம் மற்றும் இரும்புச் சத்து, ஓமத்தில் உள்ளது. அசமதா ஓமம், ஓமத்தை விட சிறிய செடி, ஆனால் விதை ஓமத்தை விட உருவில் பெரியது. காரம் அதிகம். ஆட்டின் மணம் இதில் அதிகம். ஆட்டிற்கும் இந்தச் செடியிடம் அதிக பிரியம். ஆகவே அஜமோதா என்று பெயர். இரண்டும் குணத்தில் ஒரே தரத்திலுள்ளவைதான்.
"ரஸே பாகே ச கடுகோ வீர்யோஷ்ணஸ்த்வஜமோதக:*
தீபன: பாசன: சூலகிருமிக்ன: கபபித்தஹா**"
-மதனாதி நிகண்டு.
சுவையிலும், ஜீர்ணமான பிறகும் காரமானது. உடலில் சூடு குறையாமல் பாதுகாப்பது, சூட்டை அதிகப்படுத்துவது. எளிதில் ஜீர்ணமாவது, பசியையும் ஜீரண சக்தியையும் தூண்டி எளிதில் மற்றதை ஜீரணமாக்குவது. உணவு செரிக்கையில் வாயு அதிகமாகாமல் மேல் வயிற்றை லேசாக ஆக்கி, ஹிருதயத்தின் மேல் பளுவை உணராமல் செய்வது, வயிற்றில் வாயு கபம் தங்காமல் மேலும் கீழுமாக அவைகளைப் பிரித்து வெளியேற்றவது, மலம் அழுகவிடாமல் செய்து கிருமிகள் உற்பத்தியாவதைத் தடை செய்வது, உண்டான கிருமிகளைச் செயலிழக்கச் செய்து வெளியேற்றவது, வாய் நாற்றம், குடல் நாற்றம், புளிப்பு வாடை இவைகளை அகற்றுவது, வயிற்றில் வாயுக்கட்டு, கபக்கட்டு, அடைப்பு, மலக்கட்டு இவைகளை அகற்றி குத்துவலி வேதனை, உப்புசம் இவைகளை ஜீரகம் போல மணப்பொருளாக இதையும் சமையலில் சேர்க்கிறார்கள்.
"அஜமோதா கடுஸ்தீக்ஷ்ணா தீபனீ கபவாதனுத்*
உஷ்ணா விதாஹிணி ஹ்ருத்யா வ்ருஷ்யா பலகரீ லகு:**
நேத்ராமய கபச்சர்தி ஹிக்கா வஸ்தி ருஜோ ஹரேத்*"
-பாவபிராகச:
பாவபிராகசர் குறிப்பிடுகையில் "ஓமம் காரம், உடலில் ஊடுருவிச் செல்லும் தன்மையுடது, பசியைத் தூண்டி கப வாதங்களை குறைக்கும், சூடானது, எரிச்சலைதூண்டும், இருதயத்திற்கு இதமானது, விந்துவை கூட்டி, பலத்தைக் கொடுத்து, லேசான தன்மையால் எளிதில் ஜீர்ணமாகும். கண் நோய், கபத்தினால் உண்டாகும் நோய்கள், வாந்தி, விக்கல் மற்றும் சீறுநீர் பையில் வலி ஆகியவற்றை நீக்கும் தன்மையுடையது" என்று குறிப்பிடுகிறார்.
குளிர்ச்சியான மோர் தயிர் முதலியவைகளை அப்படியே உபயோகிக்க முடியாத போது அவைகளில் ஓமத்தைத் தாளித்து அதன் குளிர்ச்சியைக் குறைப்பார்கள். மோர்க்குழம்பு, ரஸம் தயாரிக்கும் போது இதை வெடிக்கவிட்டுச் சேர்ப்பர். வயிறு சம்பந்தப்பட்ட நோய் அனைத்திற்குமான மருந்துகளில் ஓமத்திற்கு முக்கிய இடமுண்டு. ருசியின்மை, பசிமந்தம், வயிற்று உப்புசம், வயிறு இருகிக்கட்டிக் கொள்ளுதல், வயிற்றுவலி, கிருமியால் வேதனை இவைகளில் ஓமமும் உப்பும் சேர்ந்த சூர்ணம், ஓம கஷாயம், ஓமத்தீநீர் இம்மூன்றும் மிகவும் உதவக்கூடியது.
"அஜமோதா கடுஸ்திக்தா மலாவஷ்டம்ப காரிணீ*
உதராணி கிருமீம்ஸ்சைவ வாந்திநேத்ரருஜம் ஜயேத்**
வஸ்திசூலம் தந்தரோகம் குல்மம் சுக்லருஜம் ததா*"
-நிகண்டு ரத்னாகரம்.
பல் நோய்களுக்கும், குல்மம் எனப்படும் குடல் வாயு நோய்க்கும், விந்து வெளிப்படுகையில் ஏற்படும் வலியிலும் ஓமம் சிறந்த மருந்தாகும் என்று நிகண்டு ரத்னாகரம்.
ஒரு கிலோ ஓமத்தை 8 லிட்டர் ஜலம் விட்டு காய்ச்சித் தீநீர் (4 லிட்டர் வரை) இறக்குவதற்கு அஜமோதார்க்கம் என்று பெயர். (அர்க்கம்- Distilled water -தீநீர்) . இது சிறந்த ஜீர்ண காரி. வயிறு சம்பந்தப்பட்ட நோயனைத்திலும் நல்லது. வயிற்று வேக்காளம் ஏற்பட்டுள்ள நிலைகளில் ஏற்றதல்ல. அஜீர்ணமான வயிற்றுப் போக்கு, கிருமிகளால் ஏற்படும் உப்புசம், வயிற்றுப் போக்கு இவைகளில் மிகவும் சிறந்தது.
"அஜமோதா ச சூலக்னீ திக்தோஷ்ணா கபவாதஜித்*
ஹிக்காத்மான அருசிர்ஹந்தி கிருமிஜித் வஹ்னி தீபனீ**"
-தன்வந்திரி நிகண்டு.
ஓமம் வயிற்று வலியை நீக்கும், கசப்பானது, சூடான குணமுடையது, கப வாதத்தைப் போக்கும். விக்கல், வயிறு உப்புசம், ருசியின்மை, கிருமி ஆகியவற்றை நீக்கும், பசியைத் தூண்டும் என்று தன்வந்திரி நிகண்டு குறிப்பிடுகிறது.
ஓமத்தை சுட்டுக் கரியாக்கித் தூளாக்கி தேனில் 5-6 டெஸிக் கிராம் அளவு கொடுக்க வயிற்று வேக்காளத்துடன் குழந்தைகளுக்கு ஏற்படும் உஷ்ண பேதியில் மிகவும் நல்லது.
நாட்பட்ட இருமல், மூச்சுத் திணறலிலும் கபம் வெளிவருவதற்கு ஓமம் சிறந்தது. இதன் தூளைப் புகைபிடிப்பதால் கபம் எளிதில் பிரிந்து இருமல் சிரமத்தைக் குறைக்கும்.
ஓமம் மிளகு வகைக்கு 20 கிராம். இவைகளை லேசாக வறுத்துத் தூளாக்கி வெல்லம் 20 கிராம் சேர்த்து நன்கு சேரும்படி இடித்து கலந்து கொள்ளவும். 1/2 ஸ்பூன் முதல் 1 ஸ்பூன் (5 கிராம்) அளவு காலை மாலை 10 நாள் சாப்பிட வயிற்றுக்கடுப்பு, பொருமல், அஜீர்ணபேதி நீங்கும்.
வீக்கம், வலி, தேள் கொட்டின கடுப்பு இவைகளில் ஓமத்தையோ, ஓம உப்பையோ (Thymol) ஜலத்தில் இழைத்து பத்துப்போட வேதனை குறையும். வயிற்று உப்புசம், வலியில் ஓமத்தை அரைத்து பத்துப் போடுவதும், அதை வறுத்து ஒத்தடம் கொடுப்பதும் நல்ல குணம் தரும். கீரிப்பூச்சி என்னும் கிருமி நோயில் வேப்பிலை கொழுந்தும் ஓமமும் அரைத்தும் ஜலம் விட்டுக் கரைத்து வடிகட்டிக் கொடுப்பது உண்டு. பிரசவித்த மாதருக்கு கர்ப்பாசயம் பலம் குன்றியிருப்பதால், அவர்களுக்கு தரும் லேஹ்யத்தில் நல்ல பலம் தரும் ஓமம் முதலிடம் பெறும். ஓம உப்பை ஜலத்தில் கரைத்துப் புண்களை அலம்புவதால் புண்கள் சீக்கிரம் ஆறும். நாற்றமும் குறையும்.

No comments:

Post a Comment