I'm always "Squabble with Rife"

Tuesday, January 6, 2015

திராவிடமுன்னேற்றக் கழகம்

1. முன்னுரை

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், தென்னகத்தில் கண்மூடிக் கிடந்த திராவிட மக்கள் கண்திறக்கத் துணையாக 1912ஆம் ஆண்டில் டாக்டர் நடேசனார் தொடங்கிய மதராஸ் ஐக்கிய லீக் (Madras United League) அமைப்பும், கல்லூரியில் படிக்கச் சேர்ந்த திராவிட மாணவர்கள் தங்கிப் பயில திராவிட மாணவர் விடுதியும்(Dravidan Student’s Hostel);
பின்னர் 1916ல் திராவிடர் உரிமைக் குரல் எழுப்ப சர்.பிட்டி.தியாக ராயரும் டாக்டர் நாயரும் டாக்டர் நடேசனாரும் இணைந்து உருவாக்கிய தென்னிந்திய நலவுரிமைச் சங்கமான நீதிக்கட்சியும்;
தொடர்ந்து தேசிய இயக்கத்தில் நிலவிய உயர் வகுப்பார் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடப் புறப்பட்ட தந்தை பெரியார் 1925ல் தொடங்கிய சுயமரியாதை - பகுத்தறிவு இயக்கமும்,
1938ல் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தால் எழுச்சி பெற்ற தமிழர்களின் தலைவராக உயர்ந்த தந்தை பெரியார் அவர்களின் தலைமையினாலும், பேரறிஞர் அண்ணா அவர்களின் சிந்தனை யாற்றலாலும் உருக்கொண்ட இனஉணர்வு காரணமாக,
1944ல் பெயர் மாற்றம் செய்யப்பெற்று உருப்பெற்ற திராவிடர் கழகமும் என நுhறு ஆண்டுகளைக் கடந்த ஒரு நீண்ட வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட இயக்கமே திராவிட முன்னேற்றக் கழகம்.
தமிழ்நாட்டு மக்களின் உரிமை காக்கவும், தந்தை பெரியாரின் குறிக்கோளை எய்திடவும், தேவைப்பட்டதொரு ஜனநாயக இயக்கமாக 1949ல் அறிஞர் அண்ணா அவர்களால் தோற்றுவிக்கப்பட்டதே திராவிட முன்னேற்றக் கழகம்.
கடந்த 65 ஆண்டுகளாக, மனிதகுல ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, உரிமைகளைக் காத்து, சாதி, சமயப் பகை நீங்கிய சமத்துவ சமுதாயம் காணும் நோக்கில் பாடுபட்டு வருவதோடு, தமிழ் இன, மொழி, கலை, பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றைப் பாதுகாத்திட ஓயாது பணியாற்றி வருவது திராவிட முன்னேற்றக் கழகம்.
கொள்கைகளும் இலட்சியங்களும் பிரவாகம் எடுத்து - தடம் பிறழாமல், பாய்ந்தோடும் வற்றாத ஜீவ நதியாக தி.மு.கழகம் விளங்கிக் கொண்டிருக்கிறது.
அறிஞர் அண்ணா அவர்களின் அடியொற்றி, 1969ஆம் ஆண்டு முதல் இன்று வரை மாநில அரசியலில் மட்டுமன்றி, இந்திய அரசியலிலும் ஜனநாயக நெறிகளைக் காத்திடவும், இந்தியா ஒரு வலுவான பொருளாதார அமைப்பினைப் பெற்றிடவும், சாதி,சமய பேதமற்ற, சமதர்ம சமுதாயத்தை உருவாக்கிடவும், உலக அளவில் நமது நாட்டின் மதிப்பினை உயர்த்திடவும் தலைவர் கலைஞர் அவர்களின் ஈடு இணையற்ற தலைமையில் ஆக்கபூர்வமாகப் பணியாற்றி வருகிறது தி.மு.கழகம்.
இந்தப் பேரியக்கத்தை உருவாக்கி, ஆல் போல் தழைக்க வைத்து, மக்களின் வற்றாத பேரன்பைப் பெறச் செய்த, தலைவனாக, ஆசானாக, வழிகாட்டியாக விளங்கி, இன்று வங்கக் கடற்கரை ஓரம், நீடுதுயில் கொண்டிருக்கும் பேரறிஞர் பெருந்தகையின் நினைவிடம் நோக்கித் தொழுது,
ஆட்சியில் அமர்ந்துள்ள காலத்தில், மக்கள் நலனே தம் நலனெனக் கருதித் தீட்டிச் செயல்படுத்தப்படும் திட்டங்களால் மக்கள் மகிழ்ந்து பாராட்டும் நிலையில் இருந்தாலும்; எதிர்க்கட்சியாக இருந்து, ஆளுங்கட்சியின் அடக்குமுறை, அதிகார வேட்டை, அராஜகம், காரணம் இல்லாமல் நள்ளிரவில் தலைவர் வீட்டிலேயே புகுந்து தாக்குதல், சட்ட துஷ்பிரயோகம் ஆகியவைகட்கு ஆட்பட்ட நிலையில் போராடிக் கொண்டிருந்தாலும், எல்லா நிலையிலும் "மக்கள் தொண்டே மகேசன் தொண்டு’’ என்று பணியாற்றும் தி.மு.கழகத்தை; புயல் நடுவிலும் அகல் விளக்கின் சுடர் அணையாமல், காக்கும் கரங்களைப் போல, கழகத்தைப் பாதுகாத்து வரும் தமிழக மக்களுக்கு, நெஞ்சார்ந்த நன்றி கூறி இந்த நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையை முன் வைக்கிறோம்.
36 ஆண்டுகளுக்கு மேல் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றி, நம் மொழி, இனம், பண்பாட்டின்மீது நடைபெற்றுவரும் நீண்டகாலப் படையெடுப்புகளை அம்பலப்படுத்தி, ஆதிக்கசக்தியினை முறியடித்திடத் தொய்வில்லாமல் தொடர்ந்த முயற்சியில், தனது கடைசிநாள்வரை ஒரு போராளியாய்த் திகழ்ந்தவரும்; அதே உணர்வோடு வளரும் நாடுகளின் உரிமைகள் பறிபோகாமல் அவற்றை "சியாட்டில்” மற்றும் "தோகா” உலக வர்த்தக மாநாடுகளில் பாதுகாத்துத் தந்தவரும்; உயர்ந்த அரசியல், பொருளியல், சமூகச் சிந்தனையாளராகத் திகழ்ந்து, இலட்சியக் கதிராக விளங்கிக் கொண்டிருந்தவரும்; நம் நெஞ்சில் என்றென்றும் நிறைந்து வாழும் முரசொலிமாறன் அவர்கள் இதுகாறும் தயாரித்து அளித்த தேர்தல் அறிக்கைகளில் முழங்கிய இலட்சியக் கனவுகளையும் நோக்கங்களையும் எதிரொலித்திடும் வண்ணமே இந்தத் தேர்தல் அறிக்கையும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
"மத நல்லிணக்க வரலாறு படைப்போம்
மதச் சார்பற்ற ஆட்சி அமைப்போம்’’
என்ற உன்னத இலட்சியத்தினை தி.மு.கழகம் மேற்கொண்டு, இந்திய நாட்டு மக்களுக்கு நேர்மையான ஆட்சியையும் வெளிப்படையான நிர்வாகத்தையும் கிடைக்கச் செய்வதற்கு உறுதி கூறுகிறது. வேகமாக மாறிவரும் உலகப் பொருளாதாரச் சூழ்நிலையில் இந்தியாவை வளர்ந்த நாடுகளுள் முதன்மையானதாக உருவாக்குவதுடன், வறுமையை ஒழித்திடவும் அடிப்படை வசதிகளைப் பெருக்கிடவும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றும் முனைப்போடு இந்த 16வது நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கிறது.