I'm always "Squabble with Rife"

Wednesday, May 28, 2014

கண் பாதுகாப்பு

யோகாவின் மூலம் நாம் கண்களை பாதுகாக்க முடியும் என்பதை உணர்ந்து சென்னையிலுள்ள அகர்வால் கண் மருத்துவமனை, கவர்னர் திரு. ராம்மோகனராவ் அவர்களை அழைத்து திறப்பு விழாவினை நடத்தியுள்ளது. கண்களை பாதுகாப்பில் ஆச்யோதன - அஞ்சன - தர்ப்பண புடபாகம் போன்ற முறைகள் மிகவும் சிறந்தவை என்று ஆயுர்வேதம் உபதேசித்திருக்கிறது?
திரவமான மருந்தை கண்ணில், சிறிது தாரையாக ஊற்றுவது ஆச்யோதன எனப்படும். கண் நோய் எல்லாவற்றிலும் முதலில் ஆச்யோதனம் பிரயோகிக்க ஏற்றது. ஆச்யோதனம் கண்ணில் உண்டாகும் வலி, குத்தல், அரிப்பு, உறுத்தல், நீர்க்கசிவு, எரிச்சல், சிவப்பு ஆகியவற்றைப் போக்கும்.
ஆச்யோதனம் வாத நோய்களில் உஷ்ணமாகவும், கபநோய்களில் சிறிது உஷ்ணமாகவும், ரத்தத்தாலும், பித்தத்தாலும் உண்டாகும் நோய்களில் குளிர்ந்ததாகவும் இருக்க வேண்டும்.
ஆச்யோதனத்தை பிரயோகம் செய்வதற்கென முறை உள்ளது. அதிகக் காற்றோட்டமில்லாத, இடத்தில் உட்கார்ந்து நோயாளியின் கண்ணை வைத்தியர், இடது கையால் பிரித்து வலதுகையால் கிளிஞ்சிலிலிருந்து திரிபோல் தொங்குகின்ற பஞ்சின் வழியாக, 10 அல்லது 12 துளிகள் மூக்கை ஒட்டிய கண் பாகத்தில் இரண்டு அங்குல உயரத்திலிருந்து விழும்படி செய்ய வேண்டும். பிறகு மிருதுவான வஸ்திரத்தால் கண்களை துடைத்து விடவேண்டும். கபம் அல்லது வாயுவால் உண்டான நோய்களில் இளம் சூடான வெந்நீரில் நனைத்த வேறு வஸ்தீரத்தால், மிருதுவாக வியர்வை உண்டாக்கவேண்டும். ஆனால் பித்தத்தாலும் ரத்தத்தாலும் ஏற்ப்பட்டுள்ள கண் நோய்களில் ஒற்றடம் செய்யக்கூடாது.
இவ்வாறு கண்ணில் இடப்பட்ட மருந்து கண்ணில் இணையும் பகுதிகள், தலை, மூக்கு, முகம் ஆகியவற்றின் உள்ளே அமைந்துள்ள குழாய்களில் பரவி, கழுத்துக்கு மேற்பட்ட பகுதியில் உண்டான நோய்களை நீக்கும்.
அஞ்சனம் என்றால் மையிடுதல், உடலை சுத்தம் செய்து கொள்ளும் முறைகளான வாந்தி, பேதி, வஸ்தி, நஸ்யம் (மூக்கில் மருந்து) போன்றவற்றை செய்து கொண்டவருக்கு, கண்களில் மட்டும் தோஷங்கள் பழுத்த நிலையில் அஞ்சனம் அனுமதிக்கப்படுகிறது. அந்தநிலையில் காணப்படும் குறிகளாகிய வீக்கம், அதிக அரிப்பு, பிசுபிசுப்பு, உறுத்தல், கசிவு, சிவப்பு இவை மந்தமாயிருத்தல், பீளை அதிகரித்தல், பித்தம், கபம், ரத்தம் மற்றும் விசேஷமாக வாயுவால் ஏற்பட்ட நோய்கள் ஆகியவற்றில் அஞ்சனம் பிரயோகிக்கலாம்.
அஞ்சனம் மூவகைப்படும். லேகனம் (கரைப்பது) , ரோபணம் (ஆற்றுவது) , பிரஸாதனம் (தெளிவுறுத்துவது) என அஞ்சனம் மூவகைப்படும்.
துவர்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, கார்ப்பு ஆகிய சுவை உள்ள பொருள்களால் லேகானஞ்சனம்) கரைக்கும் மை தயாரிக்க வேண்டும்.
கசப்பான பொருள்களால் (ரோபண அஞ்சனம்) ஆற்றுந் தன்மையுள்ள மை தயாரிக்க வேண்டும்.
இனிப்பு, குளிர்ச்சி பொருந்திய பொருள்களால் (பிரஸாதன அஞ்சனம்) தெளிவு உண்டாக்கும் மை தயாரிக்க வேண்டும்.
தீட்சணமான அஞ்சனத்தை பிரயோகித்தால் கண் கஷ்டப்படும் போது உபேயாகிக்கப்படும் பிராஸதாஞ்சனம் எனப்படும் இது, சூர்ணாஞ்ஜனமாகும்.
அஞ்சனமிடும் (சலாகை) குச்சி பத்து அங்குல நீளமும் (மொச்சைக் கொட்டை பருமனும் இடையில் மெல்லியதாகவும், நுனி புஷ்ப மொட்டுப் போலவும், குச்சி அமைந்து இருப்பது சிறப்புள்ளதாகும். கரைக்குந் தன்மையுள்ள அஞ்சனமிட - தாமிர சலாகையும், ஆற்றுந்தன்மையுள்ள அஞ்சனமிட - இரும்பு சலாகையும், விரலும், தெளிவுறச் செய்யும் அஞ்சனமிட - தங்கம் அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட சலாகையும் ஏற்றதாகும்.
கண்ணில் எழுதப்படும் மை உருவத்தால் (பிண்டம்) குளிகை, ரஸக்ரியை (அதிக தடிப்பின்றி தேன் போன்றது) , சூர்ணம் (பொடி) என மூவகையாகும். தோஷம் அதிகமாயிருக்கும் பொழுது - பிண்டாஞ்சனத்தையும், தோஷம் நடுத்தரமான அளவில் - ரஸக்ரியையும், குறைந்திருக்கையில் - சூர்ணாஞ்சனத்தையும் பிரயோகிக்க வேண்டும். இரவில் தூங்குதல், பகலில் பானம், உணவு, சூர்ய கிரணங்களால் தளர்ந்துள்ள கண்களில் அஞ்சனமிடக்கூடாது. இது போன்ற நிலைகளில் கண்ணில் மை இடுவதால் தோஷங்கள் அதிகமாகி, கண்நோய்கள் உண்டாகும். அதனால் எப்பொழுதும் காலை மாலை நேரங்களில் அஞ்சனமிட வேண்டும். சூரியன் மேகங்களால் மறைக்கப்படாத நிலையில் அஞ்சனமிட வேண்டும்.
பகலில் சூடான மருந்துகளால் செய்யயப்பட்ட கண்மையை எழுதக்கூடாது. ஏனெனில் அதன்மூலம சுத்தம் செய்யப்பட்ட கண்கள், சூரியனைக் கண்டு மேலும் துன்புறும். சூடான வீர்யத்தைக் கொண்ட கண்மையை இரவில் குளிர்ச்சியான நேரமாக இருப்பதால் எழுதலாம்.
உலோகம் (இரும்பு) கல்லிலிருந்து உண்டாகிறது. உலோகப்பொருள் கல்லால் கூராக்கப்படுகின்றது. உலோகக் கருவிகள் கல்லால் மழுங்கிவிடுகின்றன (பலனற்றுப் போகின்றன)
அவ்வாறே பஞ்சமஹாபூதங்களில் தேஜஸால் கண்கள் உண்டாகின்றன. சூர்யன் என்ற தேஜஸால் கண்ணுக்கு பார்க்கும் சக்தி உண்டாகிறது. அதிக உஷ்ணத்தால் கண்கள் பாழாகி விடுகின்றன.
கண்மையை இட்டவுடன், கண்களை மூடிக்கொண்டு விழிகளை உள்ளே மெதுவாக சுற்ற வேண்டும். கண் இமைகளை சிறிது அசைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் சூடான குணத்தைக் கொண்ட கண்மை கண்களில் வெகு விரைவில் பரவும். கண்களை திறந்து மூடுவதோ, இமைகளை அழுத்தித் தேய்ப்பதோ, கண்களை அலம்புவதோ செய்யக்கூடாது.
மருந்தின் வேகம் குறைந்து கண்கள் அமைதியான நிலையை அடைந்தவுடன் நோய், தோஷம், காலம் இவற்றிற்கேற்ப ஜலத்தால் கண்களை அலம்ப வேண்டும். பிறகு வைத்யன் வலது கை கட்டை விரலில் துணியை சுற்றிக் கொண்டு நோயாளியின் இடது கண்ணை மேல் இரைப்பையை பிடித்துக் தூக்கி கண்களை சுத்தம் செய்ய வேண்டும். பிறகு அவ்வாறே இடது கையால், நோயாளியின் வலது கண்ணைத் திறந்து சுத்தம் செய்ய வேண்டும். கண்களை திறந்து சுத்தம் செய்யாமல் விட்டுவிட்டால் கண்மை இமைகளில் தங்கி பல நோய்களை உண்டாக்கும்.

No comments:

Post a Comment