I'm always "Squabble with Rife"

Friday, May 16, 2014

உடல் சுத்தத்திற்கான வழிகள்

ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் குறிக்கோள்கள் உண்டு. நான்கு விதமான குறிக்கோள்கள் மனிதருக்கு மிக அவசியம் என்று ஆயுர்வதேம் எடுத்துரைக்கின்றது. அவை தர்மம், அர்த்தம் (பொருளீட்டல்) , காமம் மற்றும் மோக்க்ஷம். இவைகளுக்கு புருஷார்த்தங்கள் என்று பெயர். இந்த நான்கையும் பெறுவதற்கு நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் மிகவும் தேவை. ஆயுர்வேதம் இவைகளைப் பெறுவதற்கான வழிகளை மிகச் சிறப்பாக எடுத்துக் கூறியுள்ளது.
சுத்தமான ரத்தினக்கல் ஒன்றை எடுத்து, சுத்தமான தண்ணீரில் சிறிது நாட்கள் போட்டு வையுங்கள். அதன் பிறகு ரத்தினக் கல்லை கையிலெடுத்து உருட்டுங்கள். மெலிதான அழுக்கு இழை ஒன்று இந்த ரத்தினக்கல் மேல் படர்ந்திருக்கும். அதனால் அது கையிலிருந்து வழுக்குவதைக் காண்பீர்கள்.
மேலுள்ள உதாரணம் மனித உடலுக்கும் பொருந்தும். நாம் எவ்வளவுதான் முன் ஜாக்கிரதையாக உணவு மற்றும் பழக்கவழக்கம் கொண்டிருந்தாலும், உடலின் உள் உறுப்புகளில் அவைகளை இணைக்கக்கூடிய குழாய்களிலும் அழுக்குகள் காலப் போக்கில் படிகின்றன.
இந்த அழுக்குகள் மெலிதாகப் படர்வதால் அவை உடனே நோய்களை உண்டாக்குவதில்லை. உடலை சுத்தம் செய்யாமல் விட்டுவிட்டோம் என்றால், இந்த அழுக்குகள் மெதுவாகப் பெருகி, உடல் பருமன், ஜீரணக் கோளாறு சர்க்கரை வியாதி, குஷ்டம், விஷஜ்வரம், உள்ளுறுப்புக் குழாய்களில் அடைப்பு, இந்திரியங்கள் என்று சொல்லக்கூடிய கண், காது, மூக்கு, நாக்கு, தோல் ஆகியவைகளுக்கு செயல்திறன் குன்றுதல், மூச்சிழுப்பு, உடல் வீக்கம், ரத்த சோகை, வயிற்றில் பூச்சிகள், கட்டிகள், உறக்கம் தொலைந்து போகுதல், உடல்நிறம் மற்றும் சக்தி குறைநது விடுதல் போன்ற நோய்கள் ஏற்படும்.
நல்ல சத்துள்ள உணவு வகைகளைச் சாப்பிட்டு வருபவர்களுக்கும் கூட மேலுள்ள நோய்கள் வரக் காரணம் உணவிலுள்ள சத்தை குடலிலிருந்து எடுத்தும் செல்லும் குழாய்களில் இந்த அழுக்கு படிவதால்தான். அழுக்குகள் உணவுக்குழாயிலும் மற்ற உறுப்பகளில் படியாமலிருக்கவும், சத்துள்ள உணவை உடல் நன்கு பெறுவதற்காகவும் ஆயுர்வதேம் 'பஞ்சகர்மா' என்ற உடலை சுத்தி செய்யும் ஐந்து வகையான முறைகளை கூறகின்றது. அவைகளை சற்று விளக்கமாகப் பார்ப்போம்.
1. வமனம் - வாந்தி செய்வித்தல்
2. விரேசனம் - பேதி செய்வித்தல்
3. வஸ்தி - ஆசனவாய் மூலம் மருந்து செலுத்தி குடலை சுத்தம் செய்தல்
4. நஸ்யம் - மூக்கில் மருந்துவிட்டு தலையிலுள்ள அழுக்குகளை நீக்குதல்
5. சிராவேதம் - கெட்டுப்போன ரத்தத்தை, ரத்தக் குழாயைக்கீறி, அட்டை மூலம் உறிஞ்சுதல்.

ஸ்நேக பானம் -
குழாய்களில் அழுக்குகள் காலப்போக்கில் படிவதால் அவை நன்கு காய்ந்து உட்சுவர்களில் இறுக்கமாகப் படிந்திருக்கும். அவைகளை தளர்த்தி, உருக்கி குடலுக்கு தண்ணீர் போல கொண்டுவந்த பிறகுதான் நாம் மேலுள்ள வாந்தி, பேதி ஆகியவற்றைச் செய்ய வேண்டும். சரி, இந்த அழுக்குகளை எவ்வாறு தளர்த்துவது? எவ்வாறு மறுபடியும் குடலுக்கு கொண்டு வருவது? அதற்கு இருவழிகளுள்ளன. அவை முதலில் நெய்ப்புத் தன்மையுடைய நெய், மஜ்ஜை (எலும்பின் உட்பகுதியிலுள்ள திரவம்) , வஸா (சதைக்கூழ்) மற்றும் தைலம் (நல்லெண்ணெய்) , இவைகளில் உடல் தன்மைக்கு ஏற்ப குடிக்கச் செய்வது. இந்த நான்கில் நெய் முக்யத்வம் வாய்ந்தது. அதற்குக் காரணம் நெய் தன்னுடைய குணத்தை விடாமலும், அதிலிடடு காய்ச்சக்கூடிய மருந்துகளின் சத்தை இழக்காமலும் உடலில் எண்ணெய்ப் பசையை நன்கு ஏற்படுத்துகின்றது.
ஸ்நேக பானத்தால், அதிலுள்ள நெய்ப்புத் தன்மை, அழுக்குகளின் மேல் படரும்போது இறுக்கமான அவை தளர்வடைகின்றன. இறுகிக் கிடக்கும் களிமண்ணில் நீர் விட்டால் அது சேறு போல் ஆகிவிடுகின்றது. அதே போல் ஸ்நேக பானத்தினால் அழுக்குகள் சேறுபோல குழகுழப்பாகி விடுகின்றன.
உடலில் வியர்வை உண்டாக்கினால் சேறுபோல் உள்ள அழுக்குகள் வியர்வைச் சூட்டினால் உருகி, குடலில் வந்து சேர்கின்றன. அழுக்குகள் குடலில் எந்த பாகத்தில் வந்து சேர்ந்துள்ளன என்று நாம் நன்கு ஊகித்து வாந்தி அல்லது பேதியைச் செய்ய வேண்டும். அதாவது இரைப்பை வாய்க்கு அருகிலிருப்பதால் வாந்தி மூலம் அவைகளை வெளியே கொண்டுவந்துவிடலாம் குடலில் வந்து அழுக்குகள் தங்கினால், பேதி மூலம் ஆசன வாய் வழியாக அவைகளை முழுவதும் நீக்கிவிடலாம்.
ஸ்நேக பானத்தினால் நமக்குக் கிடைக்கும் நன்மை யாதெனில் ஜடராக்னி (பசியைத்தூண்டும் நெருப்பு) நன்கு சுடர்விட்டு எரியும், குடல் சுத்தமாகும், தாதுக்கள் புத்துணர்ச்சி பெறும், உடலுக்கு வலிமை, நிறமும் கிடைக்கும். இந்திரியங்களுக்கு பலம் அதிகரிக்கும். முதிர்ச்சி ஏற்படாது. நீண்ட ஆயுள் கிடைக்கும்.
வியர்வை சிகித்ஸையினால் நல்ல பசி, உடல் மென்மை, தோல் பளபளப்பு, உணவில் விருப்பம், உடல் குழாய்கள் சூததமாகுதல், சோம்பேறித்தனம் குறைதல், உடல் பாரம் குறைதல், இறுகிய மீட்டுகளை சுலபமாக நகர்த்துதல் ஆகியவை ஏற்படும்.
வஸ்தி சிகித்ஸை
தொப்புளுக்குக் கீழ் பாகத்திலுள்ள குடல்கள் முதல் உள்ளங்கால் வரை வாதத்தின் இருப்பிடம். வாதத்தினால்தான் உடலில் எல்லா செயல்பாடுகளும்
நடக்கின்றன. இயற்கை வேகங்களை அடக்குதல், அதிக உடற்பயிற்சி, அதிக உடலறவு, பட்டினியுடன் கிடத்தல், இரவு கண்விழித்தல், காரம், கசப்பு துவர்ப்பு போன்ற சுவைகளை அதிகமாக உண்ணுதல், குளிர்ச்சி, கடலை போன்ற பொருட்கள் மூலம் வாதம் உடலில் அதிகரித்துவிடும்.
கடுமையான இடுப்பு வலி, இளைப்பு, உடல் கருத்தல், சூட்டில் விருப்பம், உடல் நடுக்கம், வயிற்றுப் பொருமல், மலம் இறுகிவிடுதல், பலவீனம், உறக்கமின்மை, இந்திரியங்களின் செயல்திறன் குன்றிவிடுதல், தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் வாததோஷம் உடலில் அதிகரித்துவிட்டது என்று நாம் அறியலாம். இவைகளை வஸ்தி முறைப்படி குறைத்துவிடலாம். மூலிகைகளை கஷாயமாகக் காய்ச்சி ஆசனவாய் வழியாக செலுத்தினால் அதற்கு 'ஆஸ்தாபனம்' என்று பெயர். கஷாய வஸ்தி குடல் வாய்வு, மண்ணீரல் நோய், வயிறு உப்புசம், வலி, நாட்பட்ட காய்ச்சல், நெஞ்சுவலி, மூட்டுவலி, மலமூத்திரம் தடைபடுதல், குடல் பூச்சிகள் போன்ற நோய்களில் பயன்படுகிறது.
மூலிகை எண்ணெயை வஸ்தியாகக் கொடுத்தால் 'அனுவாசனம்' என்று பெயர். மேலுள்ள தொந்திரவுகளுடன் உடல்வறட்சி, அதிகப் பசி, வாதநோய்களிலும் இது மிகுந்த பயன்தருகின்றது.
எண்ணெய் வஸ்தியை சாப்பிட்ட பிறகும், கஷாய வஸ்தியை வெறும் வயிற்றிலும் கொடுக்க வேண்டும்.
ஆண்குறி வழியாக அல்லது பெண்ணின் யோனி வழியாக வஸ்தி கொடுத்தால் அதற்கு 'உத்தரவஸ்தி' என்று பெயர். உத்தரவஸ்தி முறையை மூத்திரப்பை, கர்ப்பப்பை, யோனி ஆகிய இடங்களில் உண்டாகும் நோய்களில் கொடுக்கலாம். மாதவிடாயில் ஏற்படும் தொந்திரவுகளையும் இதன் மூலம் நீக்கிவிடலாம்.
வஸ்தி சிகித்ஸையின் மூலமாக தாதுபுஷ்டி, இந்திரிய பலம் ஏற்படும். மலட்டுத்தன்மை நீங்கும். நல்ல பசி, உடல்நிறம், புத்தி, குரல்வளம், நீண்ட ஆயுள், மகிழ்ச்சி, முதுமை இல்லாதிருத்தல் ஆகிய நல்ல பலன்களை அடையலாம்.
நஸ்ய சிகித்ஸை
மூக்கின் வழியாக மருந்தைச் செலுத்தல் 'நஸ்யம்' எனப்படும். மூக்கு தலையின் கதவுகளாகும். மூக்கினுள் செலுத்திய மருந்து தலையினுள் பரவி கண், காது, தொண்டை ஆகிய இடங்களில் நழைந்து, தோள்களுக்கு மேலுள்ள அனைத்து நோய்களையும் நீக்க வல்லது. அது கழிச்சல், புஷ்டிதருதல், சாந்தப்படுத்துதல் என்று வகையாக உள்ளது.
தலைபாரம், வீக்கம், எரிச்சல், அரிப்பு, அதிக உமிழ்நீர், வாயில் அருவருப்பு, குரல்வளை நோய், தலைக்கிருமி, காக்காய்வலிப்பு, வாசனைகளை உணரமுடியாத நிலை ஆகிய நோய்களில் 'கழிச்சல்' என்ற நஸ்யம் நல்ல பலனைத் தரும்.
ஒற்றைத் தலைவலி, சூர்யாவர்த்தம், கண்இடுங்குதல், துடிப்பு, பார்வைபறிபோதல், கண்மூடித்திறப்பதற்கு கடினமாக இருத்தல், பல்வலி, காதுவலி, காதில் இரைச்சல், நாக்கும் மூக்கும் உலர்ந்து போதல், கழுத்து நோய், பேச்சுத்தடை, கை அசைவில்லாமல் வலியுடன் இருத்தல், ஆகிய நோய்களில், புஷஷ்டியைத் தரும் நஸ்ய முறை மிகவும் சிறந்தது.
இளம்நரை, தோல்சுருக்கம், வழுக்கை, பொடுகு, கண்ணில் ரத்த நிறத்தில் கோடுகள், ரத்தம் ஒழுகுதல், ஆகியவற்றில் சாந்தப்படுத்தும் 'சமன'நஸ்யம் சிறந்தது.
மூலிகைப் பொடியை மூக்கினுள் போடுவது 'பிரதனம்' என்று பெயர்.
பஞ்சகர்மா முறையில் உடலை சுத்திசெய்பவர், நஸ்ய முறையை வஸ்தி செய்த பிறகு செய்து கொள்ளவேண்டும். நஸ்ய சிகித்ஸை முடிந்த பிறகு அழுக்குகளை நீக்கும் புகையை இழுத்து விட வேண்டும். நஸ்ய முறைப்படி தலையில் உள்ள அழுக்குகள் நன்கு நீங்கிவிட்டால் மூச்சு சீராக வருதல், தும்மல் சீராதல், நல்ல உறக்கம், சுலபமாக கண்விழித்தல், தலை, முகம், இந்த்ரியங்கள் சுத்தமாகுதல், கழுத்துககு மேலுள்ள நோய்கள் நீங்கிவிடுதல் ஆகிய பலன்கள் உண்டாகும்.

சிராவேத சிகித்ஸை
சுத்தமான ரத்தம் முயல் ரத்தத்தின் நிறமாகவும், குன்று மணியின் நிறத்திலும், தாமரைப்பூ வண்ணத்திலும், உருக்கிய தங்க நிறத்திலும் காணப்படும். சுத்தமான ரத்தத்தினால் உடல்பலம், நிறம், மகிழ்ச்சி, நீண்ட ஆயுள் ஆகியவை உண்டாகும்.
கண்நோய்கள், குத்தல், குடைச்சல், தலைவலி, எரிச்சல், தலையில் அரிப்பு, காது நோய், வாய்ப்புண், மூச்சுக் காற்றில் நாற்றம், கட்டிகள் மண்ணீரல் நோய், காய்ச்சல், உடல் ஓட்டைகளிலிருந்து ரத்தம் ஒழுகுதல், குஷ்டம், யானைக்கால், பசியின்மை, புளித்த ஏப்பம், வாயில் உப்புச் சுவை, கோபம், குழப்பம், அதிக வியர்வை, உடலில் விஷத்தன்மை, மயக்கம் போன்றவை ரத்தத்தின் கேட்டினால் ஏற்படுகின்றன.
நோய்களுக்குத் தகுந்தாற்போல் ரத்தக் குழாய்களைக் கீற வேண்டும். உதாரணத்திற்கு காக்கா வலிப்பு நோயில் தாடை, எலும்புகள் தலையில் சேருமிடத்திலும், பைத்தியம் பிடித்த நிலையில் மார்பு, கண்ணின் வெளிப்புற முடிவிலும், நெற்றியிலும் ரத்தக்குழாயைக் WP ரத்தத்தை வெளியேற்ற வேண்டும். அதிக ரத்தம் வரும்போது அதை உடனடியாக நிறுத்த இலவம்பிசின், கோலரக்கு போன்ற மூலிகை சரக்குகளை அருகில் வைத்துக் கொள்ளவேண்டும்.
அட்டைகள் தாமரைக் களத்தில் இருப்பவை, ஏரிகளில் உள்ளவை, நல்ல தண்ணீரில் வசிப்பவை, கரம்பச்சை நிறமுடையவை, நீலவண்ணக் கோடுகள் உள்ளவை, உருண்டு இருக்கக்கூடியவை போன்றவற்றை வைத்து நாம் கெட்ட ரத்தத்தை உடலிலிருந்து உறிஞ்சி எடுத்துவிட்டால் நோய்கள் குணமடைகின்றன.
இவ்வாறு பஞ்சகர்மா முறைப்படி உடலில் உள்ள அழுக்குகளை நீக்கி நீண்ட ஆயுளை அடைய நாம் ஒவ்வொருவரும் எப்போதும் முயர்ச்சிக்க வேண்டும்.

No comments:

Post a Comment