I'm always "Squabble with Rife"

Thursday, February 20, 2014

1991 இராஜீவ் காந்தி படுகொலை சம்பவம்...

தமிழக அரசியலையும், இந்திய அரசியலையும், இலங்கை அரசியலையும்... ஏன்? உலக அரசியலையுமே புரட்டிப்போட்ட சம்பவம்...இக்கொலை வழக்கில் தூக்கு தண்டனை இரத்து செய்யப்பட்ட பேரறிவாளன்,சாந்தன்,முருகன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக இன்று(19.02.2014) தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததையும் இதைக் கண்டித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்ததையும் பார்த்தபோது 1991 தேர்தல் பிரச்சாரம் தான் நினைவுக்கு வந்தது.அத்தேர்தலில் அ.தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர்."இராஜீவ் காந்தி படுகொலைக்குக் காரணமான தி.மு.க., வுக்கு தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும்" என்பதே ஜெயலலிதா மற்றும் காங்கிரஸ் கட்சியினரின் முக்கிய பிரச்சாரமாக இருந்தது.தி.மு.க.,படுதோல்வி அடைந்தது.முதல்முறையாக ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதல்வரானார்.காங்கிரஸ் பிரதான எதிர்கட்சியாக ஆனது.தி.மு.க.,வுக்கு ஒரு இடம் மட்டுமே கிடைத்தது.மத்தியில் ஜெயலலிதாவின் உதவியுடன் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைத்தது.ஆக இராஜீவ் படுகொலையால் உடனடியாக அரசியல் ரீதியாக பயனடைந்தது ஜெயலலிதாவும் காங்கிரஸ் கட்சியுமே.

23 ஆண்டுகளுக்குப் பிறகு அதே ஜெயலலிதா இராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்வதாக அறிவிக்கிறார்.அன்று ஜெயலலிதாவை ஆட்சி பீடத்தில் அமர்த்திய அதே காங்கிரஸ் கட்சியினர் இன்று ஜெயலலிதாவை எதிர்த்து வெளிநடப்பு செய்கின்றனர்.ஏன் இந்த மாற்றம்?ஜெயலலிதா மாறிவிட்டாரா?தமிழர்களின் உயிரைப் பாதுகாக்க வேண்டும் என்ற உண்மையான அக்கறையோடு இந்த முடிவை எடுத்துள்ளாரா?23 ஆண்டுகளாக அப்பாவிகள் சிறையில் வாடுகிறார்களே என்ற பரிதாபம் காரணமாக விடுதலை செய்துள்ளாரா?கடந்த 23 ஆண்டுகளாக தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் உலகத்திலும் நடைபெற்ற முக்கிய அரசியல் நிகழ்வுகளைப் புரிந்துகொண்டால் மட்டுமே ஜெயலலிதாவின் இந்த முடிவுக்கான உண்மையான காரணத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

இராஜீவ் படுகொலைக்குப் பிறகு நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகள்...
1.தமிழக முதல்வராக 1991ல் ஜெயலலிதா பொறுப்பேற்றார்.தமிழக அரசியலில் ஜெயலலிதா ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்தார்.
2.விடுதலை புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது.
3.இலங்கை தமிழ் மக்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே இருந்த நெருக்கமான உறவு திட்டமிட்டு பிளவுபடுத்தப்பட்டது.
4.ஈழப்போராளிகளுக்கு உதவி செய்யும் தமிழக மக்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கத் தொடங்கினர்.
5.விடுதலை புலிகள் மூலம் தம்மை கொலை செய்ய வைகோ திட்டமிட்டதாக கருணாநிதி குற்றம் சாட்டியதை அடுத்து தி.மு.க., விலிருந்து வெளியேறி 1993ல் வைகோ ம.தி.மு.க.,வை தொடங்கினார்.
6.இராஜீவ் காந்தி கொலையில் எல்லா உண்மைகளும் தெரிந்த சுப்பிரமணியசாமி ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய ஆலோசகராக மாறினார்.ஜெயலலிதா, வைகோ,ராமதாஸ்,பி.ஜே.பி., ஆகியோரின் ஆதரவோடு 1998ல் சுப்பிரமணியசாமி மதுரையில் எம்.பி., யாக தேர்வு செய்யப்பட்டார்.
7.ஒரு காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு எல்லா உதவிகளையும் செய்த காங்கிரஸ் கட்சியும்,இந்திய அரசும் இராஜீவ் படுகொலைக்குப் பிறகு இலங்கை அரசோடு சேர்ந்து ஈழ விடுதலைப் போராட்டத்தை அழிக்கும் செயலில் ஈடுபட்டனர்.
8.காங்கிரஸ் கட்சியோடு நெருக்கமாக இருந்த காரணத்தால் தி.மு.க., தனது ஆரம்ப கால கொள்கைக்கு எதிராக ஈழ விடுதலை போராட்டத்துக்கு துரோகம் செய்தது.
9.ஆரம்பத்திலிருந்தே விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கம் என்று சொல்லி வந்த ஜெயலலிதா பொடா,தடா சட்டங்களைக் கொண்டு ஈழ ஆதரவாளர்களை வேட்டையாடினார்.சமீப காலமாக அரசியல் காரணங்களுக்காக அவ்வப்போது ஈழ ஆதரவாளர்களுக்கு சார்பான நிலை எடுப்பது போல காட்டிக்கொள்கிறார்.
10.இராஜீவ் கொலையில் சர்வதேச அரசியல் சதிக்குப் பலியான விடுதலைப் புலிகள் 1991க்குப் பிறகு பெரும்பான்மையான தமிழக மக்களின் நம்பிக்கையை இழந்தார்கள். கடைசியில் சர்வதேச ஆதிக்க சக்திகளின் அரசியல் சூழ்ச்சியினால் வீழ்த்தப்பட்டார்கள்.
11.அரசியலை விட்டு ஒதுங்கி தேர்தலிலேயே போட்டியிடாமல் இருந்த நரசிம்மராவ் இராஜீவ் படுகொலையைத் தொடர்ந்து 1991ல் இந்தியப் பிரதமரானார்.
12.அரசியலுக்கே சம்பந்தமில்லாத அமெரிக்க ஆதரவாளரான மன்மோகன்சிங் இந்தியாவின் நிதி அமைச்சரானார்.உலகமயமாக்கல் என்ற புதிய பொருளாதார கொள்கை இந்தியாவின் மீது திட்டமிட்டு திணிக்கப்பட்டது.
13.கடந்த 23 ஆண்டுகளில் அமெரிக்காவின் தலைமையிலான உலக ஆதிக்க சக்திகள் இந்தியாவிலிருந்து கொள்ளையடித்துச் சென்ற செல்வத்துக்கு கணக்கே கிடையாது.
14.நாட்டு மக்களிடமிருந்து விவசாய நிலம் உள்ளிட்ட வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டு நாடோடிகள் போல பிழைப்புத் தேடி உலகெங்கும் ஓட வேண்டிய நிலை உருவானது.
15.விரல்விட்டு எண்ணக்கூடிய பன்னாட்டு கம்பெனிகள் மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளின் ஆதிக்கத்தில் நம் நாடும் நாட்டு மக்களும் சிக்கிக்கொண்டுள்ளனர்.
16.இந்தியாவில் பல லட்சம் விவசாயிகள் தற்கொலை,இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை போன்று உலகம் முழுவதும் இக்கால கட்டத்தில் மக்கள் கொத்துக்கொத்தாக கொன்று குவிக்கப்பட்டனர்.
17.மேற்கத்திய கலாச்சார படையெடுப்பால் நம்முடைய மொழி,பண்பாடு,பழக்கவழக்கங்கள்,குடும்ப அமைப்பு ஆகியவை பெருமளவுக்கு சிதைக்கப்பட்டுள்ளன.

இப்படி ஏராளமாக சொல்லிக்கொண்டே போகலாம்.இவை அனைத்துக்கும் இராஜீவ் படுகொலையை தொடர்ந்து இந்தியாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.ஆகவே இராஜீவ் படுகொலை என்பது ஒரு திட்டமிட்ட சர்வதேச சதி என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.பேரறிவாளன்,முருகன்,சாந்தன் உட்பட 7 பேருடைய விடுதலையோடு இப்பிரச்சனை முடிந்துவிட்டதாகக் கருதக்கூடாது.இவர்களுடைய விடுதலைக்காக மகிழ்ச்சியடையும் அதே நேரத்தில், முழு உண்மைகளையும் வெளிக்கொண்டுவந்து உண்மைக்குற்றவாளிகளை உலகறியச் செய்ய வேண்டும்.ஒருவேளை சுப்பிரமணியசாமியை கைது செய்து கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்தால் முழு உண்மைகளும் வெளிவரக்கூடும்.அதற்கான சூழ்நிலை உருவாகும் என்று நம்புவோம்...தமிழர்கள் உணர்வுப்பூர்வமானவர்கள் என்பதால் சூழ்ச்சி செய்து நம்மை ஏமாற்றுவது காலங்காலமாக தொடர்கிறது.இப்பொழுதும் அதே போன்ற சூழ்ச்சி விளையாட்டு நடந்துகொண்டிருக்கிறது.இதைப் புரிந்துகொள்ளாவிட்டால் ஏமாற்றுபவர்கள் நம்மை ஏமாற்றிக்கொண்டே தான் இருப்பார்கள்.

No comments:

Post a Comment