மருதாணியின் வேர், இலைகள், பூக்கள் மற்றும் விதை மருத்துவகுணம் நிறைந்தவை. இதனுடைய வேர் கசப்பானது, உடலுக்கு குளிர்ச்சியானது, இரத்தத்தை சுத்தப்படுத்தும், சிறுநீரை அதிக அளவில் வெளியேற்றும். மாதவிடாய் போக்கை சீராக்கும். கருகலைப்புக்கு பயன்படுத்துவதுண்டு. மேலும் தலைமுடி நன்கு வளர உதவும், உடல் எரிச்சலைப் போக்கும். தோல் உபாதைகளை நீக்கும். சிறுநரையைப் போக்கும். இதன் இலைகள் கசப்பும், துவர்ப்புமானவை. குளிர்ச்சியானது. வாந்தியை உண்டாக்கும், இருமலைப் போக்கும். வலி நிவாரணி. மலச்சிக்கலை ஏற்படுத்தும். இரத்தத்தை சுத்தப்படுத்தும். கல்லீரலுக்கு சிறந்த ‘டானிக்’காக இருக்கும். இரத்தத்தை விருத்திபடுத்தும். காய்ச்சலை நீக்கும். முடிவளர்ச்சிக்கு உதவும். தோலில் ஏற்படும் காயம். வயிற்றுப்புண் ஆகியவற்றை குணப்படுத்தும். கபபித்தநோய்களுக்கு நல்லது. ஒரு பக்கத்தலைவலி, இடுப்புவலி, மூட்டுவலி, வீக்கம், பேதி, இரத்தபேதி, வெண்குஷ்டம், உடல் அரிப்பு, கட்டிகள், சோகை, இரத்தக்கசிவு, கண்நோய், முடி கொட்டுதள், மஞ்சள்காமாலை போன்ற உபாதைகளில் நல்ல மருந்தாகப் பயன்படும்.
மருதாணியின் பூக்கள் புத்தியை வளர்க்கும். இதயத்திற்கு நல்லது. குளிர்ச்சியானது. தூக்கமின்மைக்கு நல்லது. இதன் விதைகள் காய்ச்சலைப் போக்க கொடுக்கலாம். புத்தி சக்தியை வளர்க்கும். மலச்சிக்கலை ஏற்படுத்தும். புத்திபேதலித்த நிலைகளில் நல்ல மருந்தாக பயன்படும். இலையை அரைத்து உள்ளங்கை, உள்ளங்கால், நகங்களின் மீது பூச்சாக பற்றிட சிவந்து உடலுக்கு அழகைத் தரும். குளிர்ச்சியான தன்மையினால் உடல் சூட்டைத் தணிக்கும். இதன் இலைகளை நீராத்தில் (பழைய சாதத்திலுள்ள தண்ணீர்) ஒரு இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலை இலைகளை கசக்கிப் பிழிந்து வடிகட்டி அந்த தண்ணீரைக் குடித்தால் பித்தம் நன்றாக வெளியேறி குளிர்ச்சியை ஏற்படுத்தும்.
No comments:
Post a Comment